பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் தனிச்சிறப்புகள் குறித்து பா.ம.க. முன்னாள் மக்களவை உறுப்பினர் தருமபுரி இரா. செந்தில் அவர்களின் பதிவு

மருத்துவர் அய்யா அவர்களே ஒற்றை கதிரவன்,
அவர் தரும் ஒளியில் இவ்வாண்டும் மலர்ச்சி பெறும்!

சென்ற நூற்றாண்டில் புதிய இந்தியாவைத் தோற்றுவிப்பதற்கும், தோன்றிய இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கும் பங்களித்த தலைவர்கள் எண்ணற்றோர் இருக்கிறார்கள்.

தலைவர்களில் இரு வகைகள் உண்டு. ஒரு புதிய கருத்தை உருவாக்கி, அதனை மக்களிடம் கொண்டு சென்று, அவர்களிடம் அதை விளக்கி, அவர்களை தம் பின்னால் திரளச் செய்து சமூகத்தை மாற்றுபவர்கள் ஒரு வகையினர்.‌

இப்படிப்பட்ட தலைவர்களின் பின்னால் நின்று அவர்களின் வழியில் சென்று மிகப்பெரிய தலைவர்களாக உருவானவர்கள் இரண்டாவது வகை.

இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டின் விடுதலைப் போரை அகிம்சை வழியில் அமைப்பதற்கான கொள்கைகளை உருவாக்கி, மக்களைத் திரட்டி, அப் போராட்டத்துக்கு வடிவம் கொடுத்து செலுத்தியவர காந்தி என்ற தனிமனிதர். நேரு உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அவர் பின்னால் சென்றவர்கள்.‌

பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகள் நீண்ட நெடுங்காலமாக தமிழ் மண்ணில் இருந்தாலும், அவற்றைக் கூர்மைப்படுத்தி, இந்த கொள்கைகளையும், இட ஒதுக்கீடு, சமூக நீதி, ஆகியவற்றையும் இணைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்துக்கு புதிய வடிவம் கொடுத்த பெருந்தலைவர் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அவர் பின்னால் சென்றவர்கள்.

தமிழகத்தின் மிகப்பெரிய சமூகமான வன்னியர்கள் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி அடையவில்லை என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பலர் கூறியிருந்தாலும், அந்தக் கருத்துகளை வெகு மக்களிடம் பரப்புரை செய்து, அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்துக்கு வடிவத்தைத் தந்து, மக்களைத் திரட்டி, தமிழகம் கண்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றை நடத்தி 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த தனிப்பெரும் தலைவர் மருத்துவர் அய்யா.

பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கு இட ஒதுக்கீடு மட்டும் விடையல்ல என்பதை முழுமையாக உணர்ந்து மது ஒழிப்பு, தரமான, ஒரே மாதிரியான, இலவசக் கல்வி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிர்ப்பு, வேளாண் நிலங்கள் பாதுகாப்பு போன்ற அனைத்தையும் பேசி அவற்றுக்காக போராடிவரும் மாபெரும் தலைவர் மருத்துவர் அய்யா.

அய்யாவின் பின்னால் திரண்ட மக்கள் அடித்தட்டு மக்கள். உழைப்பாளி வர்க்க மக்கள்.‌ நேர்மையையும், உழைப்பையும் மட்டும் நம்பி வாழ்பவர்கள். உணர்வுபூர்வமாக மட்டுமே செயலாற்றத் தெரிந்தவர்கள்.

கதிரவன் ஒளியில் உலகில் உள்ள அத்தனை உயிரினங்களும் ஒளி பெறுவதைப் போல அய்யாவின் அறிவுச்சுடர் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு வெளிச்சம் பாய்ச்சி, அறிவு புகட்டி, அவர்களை வழி நடத்தியது.

எந்தவித ஐயத்துக்கும் இடமின்றி அய்யா என்ற கதிரவன் சென்ற நூற்றாண்டின் முதன்மை தலைவர்களில் ஒன்று.

அக் கதிரவனின் ஒளியில் இவ்வாண்டும் மலர்ச்சி பெறும். வளர்ச்சி பெறும்.

எத்தனையோ கோள்கள் இருந்தாலும் கதிரவன் ஒன்று தானே!