பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வேண்டுகோள்:-
இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே,
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை (குறள்: 400)
உலகில் அனைத்துச் செல்வங்களுக்கும் அழிவு உண்டு. ஆனால், கல்விச் செல்வத்திற்கு அழிவு இல்லை என்பதை இந்தக் குறள் மூலம் வள்ளுவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால், இன்றைய சூழலில் கல்வி என்பது மற்ற செல்வங்கள் அனைத்தையும் விற்று பெற வேண்டிய ஒன்றாகி விட்டது. அந்த அளவுக்கு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் அதிகரித்து விட்டன. அவ்வளவுக் கட்டணம் செலுத்தி படிக்க வைத்தாலும், அங்கு அறிவை வளர்க்கும் கல்வி வழங்கப்படுவதில்லை. மனப்பாடத்தை ஊக்குவித்து, மாணவர்களை ‘வெள்ளைக் கால் கோழி’களாக மாற்றும் கல்வியைத் தான் தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.
மற்றொருபுறம் அரசுப் பள்ளிகள் செயலிழந்து கிடக்கின்றன. முதன்மைப் பாடத்தைக் கற்றுத்தருவதற்கு கூட அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. மாறி வரும் பொருளாதார சூழல் காரணமாக அரசு பள்ளிகளில் சேர்ந்து பயில மாணவர்கள் தயாராக இருந்தாலும் அரசு பள்ளிகளின் நிலைமை கவலைக் கிடமாக மாறி வருவதால் அங்கும் தரமான கல்வி கிடைக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு காலியிடங்களுடன் மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு மட்டும் 6% ஒதுக்கப்பட வேண்டும் என்று 1964&ஆம் ஆண்டில் கோத்தாரி ஆணையம் பரிந்துரை செய்தது. அதன்படி நடப்பாண்டில் தமிழகத்தில் கல்விக்காக மட்டும் ரூ.1.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.44,000 கோடி மட்டுமே பள்ளிக் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது யானைப் பசிக்கு போடப்படும் சோளப்பொறி ஆகும்.
அம்பானியின் மகனுக்கு வழங்கப்படும் அதே தரத்திலான கல்வி சாதாரண குப்பன் மகனுக்கும், சுப்பன் மகனுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையாகும்.
அந்தக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம்.
இத்தகைய நோக்கம் கொண்ட கட்சியால் தான் அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் நோக்குடன் தான் தரமான கல்விக்கான செயல்திட்டத்துடன், அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கைகளில் பா.ம.க. வாக்குறுதி அளித்து வருகிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வல்லமை பா.ம.க.வுக்கு உண்டு.
அதற்காக பா.ம.க.வுக்கு தேவைப்படுவது அதிகாரம் மட்டுமே. அதை வழங்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்த அதிகாரத்தை நீங்கள் வழங்கினால் சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசம் என்ற உங்களின் கனவும், எங்களின் கனவும் நிறைவேறும். அதற்கான புரட்சியை ஒற்றை விரலில் நிகழ்த்துங்கள்.