இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.
மனிதர்கள் ஈட்டக்கூடிய அனைத்து செல்வங்களையும் விட மிகப்பெரிய செல்வம் நலவாழ்வு என்பதை உணர்ந்து தான் நமது முன்னோர்கள் இந்த பழமொழியைக் கூறியிருப்பார்கள்.
அன்று நமது மூத்தோர் கூறிய பழமொழி இன்றைக்கும் பொருந்தும். ஆனால், அதன் பொருள் தான் மாறுபடுகிறது. அப்போது நோயற்ற வாழ்வு என்பது குறைவற்ற செல்வமாக இருந்தது. ஆனால், இப்போது நோய் என்பது செல்வத்தை அழிக்கும் சக்தியாகி விட்டது.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மருத்துவச் செலவு தான் மக்களை கடனாளியாக்குகிறது. அமெரிக்காவில் 41 விழுக்காட்டினர் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடனாளியாகின்றனர் என்று அந்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடுத்தர வகுப்பினரில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானவர்கள் மருத்துவச் செலவுகளை சமாளிக்க முடியாமல் கடனாளி ஆகின்றனர் என்று நிதி ஆயோக் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்களை நோயிலிருந்து காப்பதன் மூலம் மக்களையும் காக்க முடியும், அவர்களின் சொத்துகளையும் காக்க முடியும். நோய்க்கு ஆட்பட்டு விட்ட மக்களுக்கு தரமான மருத்துவத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் அவர்களின் உடல்நிலையை தேற்ற முடியும்; சொத்துகளை பாதுகாத்து, கடன் வலையில் சிக்காமல் காப்பாற்ற முடியும்.
இந்த உன்னத நோக்கத்திற்காகத் தான் தமிழ்நாட்டில் அனைவருக்கும் மருத்துவம் இலவசம் என்பதை கடந்த தேர்தல்களில் முதன்மை வாக்குறுதியாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்து வருகிறது. இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள மருத்துவ முறை போன்ற கட்டமைப்பை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்துவது, அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவது உள்ளிட்ட இந்த வாக்குறுதியை செயல்படுத்துவதற்கான அனைத்து செயல்திட்டங்களையும் பா.ம.க. வகுத்து பொதுமக்களின் பார்வைக்கு முன்வைத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என்ற முழக்கத்தை முன்வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். கடந்த ஆட்சியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணமாக இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு சிறப்பான திட்டங்களை பாமக வைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் பிரதிநிதித்துவமும், அதன் மூலம் அதிகாரமும் வழங்கப்பட்டால், அது மக்களுக்குத் தான் நன்மையாக இருக்கும். மருத்துவம், கல்வி, விவசாயம் ஆகிய அனைத்தும் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு இவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது இமாலயக் கனவு தான். அந்தக் கனவு நிறைவேறுவது உங்கள் கைகளில் தான் உள்ளது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உங்கள் கைகள் வைக்கும் புள்ளி தான் உங்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வரையப்படும் கோலத்திற்கு அடிப்படையாக இருக்கும்.