மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.
இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் சீதாராம் யெச்சூரி ஆவார். தில்லியில் ஸ்டீபன் கல்லூரி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற யெச்சூரி, தமக்கு மூத்தவரான பிரகாஷ் காரத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றியவர். கட்சிகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டிருந்த யெச்சூரி, தேசிய அளவில் கூட்டணிகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தவர். பெரியவர் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த யெச்சூரி, 1996ஆம் ஆண்டில் தேவகவுடா தலைமையிலும், 2004ஆம் ஆண்டில் மன்மோகன்சிங் தலைமையிலும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் பெரும் பங்காற்றியவர். அரசியலில் மேலும் பல உச்சங்களைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவால் தோழர் யெச்சூரி காலமானதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்