அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக்கொடுத்ததற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு தமிழ் அருந்ததியர் சங்கத்தினர் நன்றி!

பா.ம.க. தலைமை நிலையச் செய்தி:-

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில்  அருந்ததிய மக்களுக்கு  3%  உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும்; பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று அளித்தத்  தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு உறுதி செய்துள்ள நிலையில் தமிழ் அருந்ததியர் சங்கத்தின் நிர்வாகிகள் அதன் மாநிலத் தலைவர்  மாங்கனி முருகேசன்   தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது  தங்களுக்கு உள் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதற்காக வன்னியர் சங்கத்தின் சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக  அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழ் அருந்ததியர்  சங்கத்திற்கும்  நீண்ட உறவு உண்டு.  பாட்டாளி மக்கள் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே 1988-ஆம் ஆண்டில்  ஈரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில்  வன்னியர் சங்கமும், தமிழ் அருந்ததியர் சங்கமும் இணைந்து வன்னியர் – அருந்ததியர் ஒற்றுமை மாநாட்டை நடத்தின. அருந்ததியர் சங்க தலைவர் மா.இராமன் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில், மருத்துவர் அய்யா அவர்கள்  கலந்து கொண்டு, அருந்ததியருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; இல்லாவிட்டால் அந்த சமுதாயத்திற்கும் சேர்த்து வன்னியர் சங்கம் போராடும் எச்சரித்தார்.

அப்போது தொடங்கி 2009-ஆம் ஆண்டில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் வரை பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது என்பதையும்,  மருத்துவர் அய்யா அவர்களின் ஆணைப்படி தமிழ் அருந்ததியர் சங்கம் உள்ளிட்ட 13 அருந்ததியர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் அப்போதைய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கடந்த 27.11.2008-ஆம் நாள் அப்போதைய முதலமைச்சர் கலைஞரை சந்தித்து பேசிய போது தான் அருந்ததியர் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது என்பதையும் தமிழ்  அருந்ததியர் சங்க நிர்வாகிகள் மருத்துவர் அய்யா அவர்களிடம் நினைவு கூர்ந்தனர். அதைக் கேட்ட மருத்துவர் அய்யா அவர்கள், அருந்ததியர்களின் உரிமைகளுக்காக பா.ம.க. எப்போதும் குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது பா.ம.க.  பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், வன்னியர் சங்க செயலாளர் சேலம் கார்த்தி, தமிழ் அருந்ததியர் சங்க மாநில நிர்வாக செயலாளர் கருவை கணேசன், மாநில துணைத்தலைவர்கள் சேலம் மா.கோபால்,  சேலம் சுந்தரராசன்,  சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.சேட்டு, ஒன்றிய நிர்வாகிகள்  எம்.இராஜேந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.