என் அன்புக்குரிய பட்டியலின சொந்தங்களே,
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை மாதம் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடங்கி விட்ட நிலையில், அந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக விக்கிரவாண்டி தொகுதியில் பெரும்பான்மையாக நிறைந்திருக்கும் பட்டியலின சொந்தங்களுக்கும், பாட்டாளி சகோதரர்களுக்கும் இடையே பகைமைத் தீயை மூட்டி குளிர்காயும் முயற்சிகளில் சில சக்திகள் ஈடுபட்டிருப்பதை நான் நன்கு அறிவேன்.
அந்த சதியை முறியடிக்க வேண்டும்; உழைப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட இரு சமூகங்கள் ஒற்றுமை உணர்வுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த மடலை வரைகிறேன்.
தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களில் முதன்மையானவர்கள் வன்னியர்களும், பட்டியலினத்தவர்களும் தான். இரு பிரிவினரின் மக்கள்தொகை 40%க்கும் அதிகம். இவர்கள் இருவரும் இணைந்தால் அரசியலிலும், சமூக முன்னேற்றத்திலும் சாதனைகளை நிகழ்த்தலாம். ஆனால், அப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இரு உழைக்கும் சமூகங்களையும் பிரித்து வைத்திருக்கின்றன அரசியல் ஆதிக்க சக்திகள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை சமூகங்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பது பெரும் துரதிருஷ்டம் தான். வன்னிய மக்கள் மட்டுமின்றி, பட்டியலின மக்களும் முன்னேற வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். பட்டியலின மக்களுக்கு அங்கீகாரமும், அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதற்காக அவர் அளவுக்கு, வேறு எந்த தலைவரும் உழைத்ததில்லை என்பது தான் நான் கண்டு உணர்ந்த உண்மை.
பட்டியலின மக்களின் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் கடந்த 45 ஆண்டுகளில் அவர் செய்த பணிகள் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காகவும், புரிதலுக்காகவும் இங்கு பட்டியலிடுகிறேன்…
1. மருத்துவர் அய்யா அவர்களால் 1980-ஆம் ஜுலை 20-ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானம் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்தவேண்டும் என்பது தான்.
2. பா.ம.க. தொடங்கியபோதே அதன் கொள்கைவழிகாட்டிகளில் ஒருவராக அண்ணல் அம்பேத்கரை ஏற்றுக் கொண்டது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தான்.
3. பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் எது? என்ற தேடல் எழுந்த போது, அம்பேத்கர் முதன்முதலில் போட்டியிட்ட யானை சின்னம் தான் வேண்டும் என்று அதை தேர்வு செய்ததும் அய்யா அவர்கள் தான். அந்த சின்னத்தில் தான் பா.ம.க. 3 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றது.
4. மருத்துவர் அய்யா அவர்களின் நண்பர் கன்ஷிராம் உருவாக்கிய பகுஜன்சமாஜ் கட்சி தேசிய கட்சியாக உருவெடுத்த நிலையில், அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க யானை சின்னத்தை அவருக்கு மருத்துவர் அய்யா விட்டுக் கொடுத்தார்.
5. அரியலூர் மாவட்டத்தில் நடைமுறையில் இருந்த இரட்டைக்குவளை முறையை ஒழிக்க முடிவெடுத்து, ஜெ.குருவின் அழைப்பை ஏற்று காடுவெட்டி கிராமத்திற்கு அய்யா சென்றார். அங்குள்ள தேநீர் கடை ஒன்றில் வன்னிய மக்கள், பட்டியலின மக்கள் அனைவரையும் ஒன்றாக அமரச் செய்து ஒரே மாதிரியான குவளையில் தேநீர் பரிமாறி தீண்டாமைக்கு முடிவு கட்டினார்.
6. ஜெ.குரு அவர்களின் ஏற்பாட்டில் அரியலூர் மாவட்டத்தின் பல இடங்களில் 7 அம்பேத்கர் சிலைகளை ஒரே நாளில் திறந்து வைத்ததும் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
7. தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அம்பேத்கர் சிலைகளை அமைத்து, திறந்த ஒரே அரசியல் கட்சித் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
8. தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அம்பேத்கர் சிலையை அமைத்து, அதை தொல்.திருமாவளவனைக் கொண்டு திறக்கச் செய்ததும் அவர் தான்.
9. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் தமது வீட்டு வளாகத்தில் அம்பேத்கர் அவர்களின் சிலையை அமைத்த தலித் அல்லாத ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
10. ‘‘இந்தியாவிலேயே தலித் இயக்கம் அல்லாத ஒரு கட்சி அதன் கொள்கை வழிகாட்டியாக அண்ணல் அம்பேத்கரை ஏற்றுக் கொண்டது என்றால், அது பாட்டாளி மக்கள் கட்சி தான். அம்பேத்கரின் சிலைகளை அதிக எண்ணிக்கையில் திறந்த தலித் அல்லாத ஒரே தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தான்’’ என்று பாராட்டியவர் வேறு எவருமல்ல…. நமது தொல். திருமாவளவன் தான்.
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன்களுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் தவிர வேறு எந்தத் தலைவராவது இந்த அளவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? பட்டியலின சகோதர, சகோதரிகளே, பண்புள்ள படித்த இளைஞர்களே, மாணவர்களே சிந்திப்பீர்!
11. உழைக்கும் சமூகங்களான வன்னியர்களும், பட்டியலினத்தவரும் முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவே ஆளும் வர்க்கங்களால் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டனர். அவர்களை மதுவின் பிடியில் இருந்து மீட்கவே மதுவுக்கு எதிராக 43 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்கள் போராடி வருகிறார்.
12. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட போது, அது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக போராடும் கட்சியாகவும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக அய்யா உருவாக்கினார். அதே நிலை இன்றும் தொடர்கிறது.
13. பாட்டாளி மக்கள் கட்சிக்கான கொடி உருவாக்கப்பட்ட போது, அதில் பட்டியலின மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் நோக்குடன் நீல வண்ணம் சேர்க்கப்பட்டது. முதலில் நீல வண்ணம் தான் கீழே மூன்றாவதாக இருந்தது. பட்டியலின மக்களுக்கு ஏற்றமளிக்க வேண்டும் என்று கொடியில் நீல வண்ணத்தை மேலே முதலாவதாக மாற்றியமைத்தவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
14. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பட்டியலின உறவுகள் தான் அலங்கரித்து வருகின்றனர். அந்த வரிசையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் அந்தப் பதவியை வகித்து வருகிறேன். அந்தப் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி பாமக விதியை வகுத்துள்ளது. வேறு எந்தக் கட்சியிலும் இத்தகைய நிலை இல்லை.
15. 1998&ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு முதன் முதலில் கிடைத்த அமைச்சர் பதவியை, 3 வன்னிய மக்களவை உறுப்பினர்கள் இருந்தபோதும் பட்டியலினத்தவரான தலித். எழில்மலையை அமரவைத்து அழகு பார்த்தது அய்யா அவர்கள் தான்.
16. 1999&ஆம் ஆண்டில் பா.ம.க.வுக்கு கிடைத்த இரண்டாவது மத்திய அமைச்சர் பதவியும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இரா. பொன்னுசாமி என்பவருக்குத் தான் வழங்கப்பட்டது.
17. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இருவரை பா.ம.க. மத்திய அமைச்சராக்கிய பிறகு தான் வேறு வழியின்றி 1999&ஆம் ஆண்டில் ஆ.இராசா என்ற தலித்தை தி.மு.க. மத்திய அமைச்சராக்கியது.
18. தமிழ்நாட்டில் அருந்ததிய மக்களுக்காக 1988 முதல் 2008 வரை 20 ஆண்டுகள் போராட்டம் நடத்தி உள் இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததும் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
19. மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே அதில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அத்தகைய சூழலில், அய்யாவின் வழிகாட்டுதலின்படி தான் 2007-ஆம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய மருத்துவர் அன்புமணி இராமதாசு இந்த சமூகங்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்கினார். இது வரலாற்று சாதனை. இதனால் கடந்த 17 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான பட்டியலின/பழங்குடியின மாணவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவ உயர்படிப்புகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
20. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பட்டியலின மாணவர்களிடம் பாகுபாடு (Discrimination) காட்டப்பட்ட போது, தோரட் குழுவை அமைத்து தில்லியில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அய்யாவின் வழிகாட்டுதலின்படி, பாகுபாட்டை ஒழித்தவர் அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்.
21. கும்பகோணத்தையடுத்த குடிதாங்கி கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை தாங்கள் வாழும் பகுதி வழியாக எடுத்துச் செல்ல வன்னியர் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி பட்டியலின சகோதரரின் உடலை தோளில் சுமந்து சென்று கொள்ளிடக் கரையில் அடக்கம் செய்தது இராமதாசு அய்யா அவர்கள் தான்.
22. பட்டியலின சகோதரரின் உடலை தோளில் சுமந்து சென்றதற்காக மதுரை மேலூரில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தி, ‘தமிழ்க்குடிதாங்கி’ எனும் பட்டத்தை தொல்.திருமாவளவன் வழங்கினார்.
23. மதுரையில் தலித் சிறுத்தைகள் என்ற பெயரில் அரசியல் செய்து கொண்டிருந்த திருமாவளவனை வட தமிழகத்திற்கு அழைத்து வந்ததும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு திருமாவளவனை தலைவராக்கி அழகு பார்த்ததும் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
24. பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் திருமாவளவன் வழங்கினார். பட்டியலின மக்களின் நலனுக்காக மருத்துவர் அய்யா அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றி அரை மணி நேரம் அந்த விழாவில் விளக்கினார். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
25. ‘‘2011 தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்து போட்டியிட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களுக்காக எங்கள் கட்சி மற்றும் சமுதாய மக்களை விட பாட்டாளி மக்கள் கட்சியினர் தான் சிறப்பாக பணியாற்றினர்’’ என்று பாராட்டியது வேறு யாருமல்ல…. தொல். திருமாவளவன் அவர்கள் தான்.
26. 2009-ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கைப் போரை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையை அடுத்த மறைமலைநகரில் சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தை திருமாவளவன் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவரது போராட்டத்தை கைவிடச் செய்யும்படி அவர் மீது அக்கறை கொண்டவர்கள் மருத்துவர் அய்யா அவர்களிடம் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து மருத்துவர் அய்யா அவர்கள் தான் திருமாவளவனுடன் பேசி, பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நலன்களுக்காக மருத்துவர் அய்யா அவர்களைத் தவிர வேறு எந்தத் தலைவராவது இந்த அளவுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா? பட்டியலின சகோதர, சகோதரிகளே, பண்புள்ள படித்த இளைஞர்களே, மாணவர்களே சிந்திப்பீர்!
27. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, சென்னை தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைத்து, அதன் மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதரின் பெயர் சூட்டப்படுவதற்கு காரணமாக இருந்ததும் அய்யா அவர்கள் தான்.
28. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மருத்துவர் அய்யா அவர்களின் நெருங்கிய நண்பர். அவர் தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மருத்துவர் அய்யா அவர்களின் திண்டிவனம் இல்லத்திற்கும், தைலாபுரம் தோட்டத்திற்கும் வருகை தருவது வழக்கம். தமிழகத்தில் தலித் விடுதலை அய்யா அவர்களால் தான் சாத்தியமாகும் என நம்பினார்.
29. வன்னியர் – பட்டியலின மக்களின் ஒற்றுமைக்காக எல். இளையபெருமாள், சக்திதாசன், டாக்டர். சேப்பன், வை.பாலசுந்தரம், பி.வி. கரியமால், வேலூர் மூர்த்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டியலின இயக்கத் தலைவர்களுடன் நெருக்கமான நட்பையும், உறவையும் மருத்துவர் அய்யா அவர்கள் கொண்டிருந்தார்கள்.
30. எல். இளையபெருமாள் அவர்களை காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும், கரியமால் அவர்களை தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியிலும் தேர்தலில் நிறுத்தி அழகு பார்த்தது மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
31. வன்னியர் & பட்டியலினத்தவர்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக வேலூர், விழுப்புரம், தருமபுரி ஆகிய இடங்களில் வன்னியர் & ஆதிதிராவிடர் ஒற்றுமை மாநாடுகளை நடத்தியவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான்.
பட்டியலின சகோதர, சகோதரிகளே, படித்த, பண்புள்ள, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்களே, மாணவர்களே சிந்திப்பீர்!
பட்டியலின மக்களின் நலனுக்காக பாடுபடுவதில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இணையான தலைவர்கள் தமிழகத்தில் உண்டா? கடந்த காலங்களில் எவரேனும் இருந்தார்களா? இப்போது இருக்கிறார்களா? இனி வரும் காலங்களிலாவது உருவெடுப்பார்களா? சிந்தித்துப் பாருங்கள்.
நாம் ஏன், எதற்காக, எப்படி, எதனால் பகையாக்கப்பட்டோம்? என்று படித்த, முற்போக்கு, சிந்தனை கொண்ட பட்டியலின இளைஞர்களே சிந்தியுங்கள்…. பிளவு ஏற்படுத்துபவர்களை ஒதுக்கி வைத்து, நல்லிணக்கம் ஏற்படுத்த பாடுபட்டு வரும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு துணை நில்லுங்கள், ஆதரவுக்கரம் நீட்டுங்கள். இரு பெரும் சமுதாயங்களும் ஒன்று சேர்ந்தால் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அதற்கான மறு பயணத்தின் தொடக்கப் புள்ளியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அமையட்டும்.
அனைத்துத் தரப்பு மக்களின் நன்மைகளுக்காக பட்டியலின சகோதர, சகோதரிகளும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன் மூலம் அரசியலிலும், சமூகத்திலும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு உங்களின் உறவுக்காரன்,
ச. வடிவேல் இராவணன்,
பொதுச் செயலாளர்,
பாட்டாளி மக்கள் கட்சி