பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் மடல்.
என் அன்புக்குரிய அனைத்து சமுதாயங்களின் சகோதர, சகோதரிகளே!
ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் இப்போது மொத்தமாய் குவிந்திருப்பது விக்கிரவாண்டியின் மீது தான். அங்கு அறம் வெல்லுமா? அநீதி வீழுமா? என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விக்கிர வாண்டி தொகுதி வாக்காளர்கள் நினைத்தால் தமிழ்நாட்டு அரசியலில் புதிய வரலாற்றை எழுத முடியும். அத்தகைய புதிய வரலாற்றை படைக்க ஆயத்தமாகுங்கள், தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என்று அனைத்து சமூகங்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதற்காகவே இந்த மடலை நான் வரைகிறேன்.
இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது மக்களின் தோல்வியாகும். மாறாக, எதிர்க்கட்சி வென்றால் அது தான் மக்களின் வெற்றியாகும். விக்கிரவாண்டி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி.அன்புமணி வெற்றி பெற்றால் அது ஆளுங்கட்சியினருக்கு அச்சத்தையும், நடுக்கத்தையும் கொடுக்கும். ஆளுங்கட்சி அதன் தவறுகளைத் திருத்திக் கொள்ளும். அதனால் மக்களுக்கு நன்மை கிட்டும். அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வாக்காளர்கள் பா.ம.கவுக்கு அளிக்கும் வாக்குகள் தான் தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். அதனால் தான், உங்களையும் இந்த புனிதக் கடமைக்கு அழைக்கிறேன்.
தமிழ்நாட்டில் எந்த சமூகப்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த தொழில்பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்காக முதன் முதலில் குரல் கொடுப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த உரிமையில் தான் பா.ம.க.வுக்கு வாக்கு அளிக்கக் கோரி அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரின் நன்மைக்காக பா.ம.க. நிறுவனராகிய நான் மேற்கொண்ட ஏராளமான பணிகளில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு உங்கள் பார்வைக்காக பட்டியலிட்டு காட்ட விரும்புகிறேன்.
1. தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 45 ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். 1980ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது இதை வலியுறுத்தி தான் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
3. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களும் பயனடையும் வகையில் மாநில அளவில் 4 வகையான இட ஒதுக்கீடுகளையும், தேசிய அளவில் இரு இடஒதுக்கீடுகளையும் போராட்டங்களை நடத்தி வென்றெடுத்தது இந்த ராமதாசு தான்.
4. அனைவருக்கும் தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.
5. திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதை தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
6. அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதே பா.ம.க.வின் கொள்கை. அதற்கான செயல்திட்டங்களை தமிழக அரசுக்கு நான் வகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
7. விவசாயிகளுக்கு அனைத்து இருபொருள்களும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்குவதுடன், கரும்பு டன்னுக்கு ரூ.5,000, நெல் குவிண்டாலுக்கு ரூ.3500 வீதம் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறேன்.
8. காவிரி பாசன மாவட்டங்களில் வேளாண்மையை பாதுகாப்பதற்காக அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி பெற்ற இயக்கம் பா.ம.க.
9. ஆற்றுநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்; அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருவது இந்த இராமதாசு தான்.
10. தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நிலங்களை பறிக்க முயற்சிகள் நடைபெற்ற போது, அதை தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி தான்.
11. பெண்களின் பாதுகாப்பு தான் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. குழந்தைகள் முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் வரை அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க.போராடி வருகிறது. அதற்காக காவல்துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்தச் செய்துள்ளது.
12. அனைத்து சமூகங்களுக்கும் பெரும் தீமையாக இருப்பது மது. அதனால் தான் ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக 45 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
13. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா ஊடுருவியுள்ளது. அதனால், இளைஞர் சமுதாயம் சீரழிந்து வரும் நிலையில், அதை ஒழிப்பதற்காக தொடர் போராட்டங்களை பாமக நடத்தி வருகிறது.
14. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 100க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் இரு முறை இயற்றப்படுவதற்கு நான் தான் காரணமாக இருந்தேன். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி இப்போது பா.ம.க. போராடி வருகிறது.
15. திமுக வாக்குறுதி அளித்தவாறு 5.5 லட்சம் அரசு வேலைகளை உருவாக்கவில்லை. அவற்றை உருவாக்கி இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவது இந்த இராமதாசு தான்.
16. திண்டிவனம் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பேட்டைகளில் வட மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 80% வேலைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவது பா.ம.க. தான்.
17. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்று கூறிய திமுக, அதை செய்யவில்லை. திமுகவின் இந்த மோசடியை அம்பலப்படுத்தி வருவது நான் தான்.
18. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு என அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுத்துள்ளது. அவற்றுக்கு எதிராக அவற்றை திரும்பப் பெறச் செய்வதற்காகவும் பா.ம.க. தான் போராடி வருகிறது.
19. அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க பா.ம.க. போராடி வருகிறது. இதற்காக பொது சேவை உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகிறது.
20. திமுக உறுதியளித்தவாறு மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யத் தவறி விட்டது. அதை சுட்டிக்காட்டி, மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி போராடி வருவது பாமக தான்.
நான் மீண்டும், மீண்டும் வேண்டுகிறேன்… விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் அளிக்கும் முடிவு திமுக அரசுக்கு போடும் கடிவாளமாக இருக்கும். விக்கிரவாண்டி தொகுதியில் தோற்றால் தான் திமுக அரசு அதன் தவறுகளை உணர்ந்து, அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும்.
ஆகவே, அனைத்து சமுதாய சகோதர, சகோதரிகளே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களும் ஏற்றம் பெற வேண்டுமால், ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க, வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.