மின்சார கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, பாமக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில், மின்சார கட்டண உயர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, பாமக சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி அவர்கள் பேசியது:

கடந்த 23 மாதங்களில் 3 முறை மின்கட்டணத்தை 33.73% அளவு தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது. இது மக்கள் மீது திணிக்கப்பட்ட மின்சார தீவிரவாதம். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு இணையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது.

அப்பாவி மக்கள் மீது தாங்க முடியாத அளவிலான மிகப்பெரிய சுமையை வலுக்கட்டாயமாக திமுக அரசு திணித்துள்ளது. மின்கட்டண உயர்வு மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால், இன்னும் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது மிகபெரிய மோசடி. தமிழகத்தில், லஞ்சம், ஊழல் பெருக்கெடுத்து ஓடும் நிர்வாகத் திறமையற்ற அரசாக உள்ளது. தமிழ்நாட்டில் 85 சதவீதம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அவை இந்த மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரத் துறையில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க வேண்டும்.

நேர்மையான திறமையான அதிகாரிகளே நியமனம் செய்து நல்ல நிர்வாகம் நடைபெற வேண்டும். இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் நடைபெறாத விஷயங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 23 மாதத்தில் தமிழக அரசு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இவ்வளவு தொகை வந்த பிறகும் நஷ்டத்தில் ஏங்க காரணம் ஊடல்தான் காரணம்.

தமிழக அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை 1 யூனிட் 3 ரூபாய் 40 பைசா, தமிழக அரசு தனியாரிடம் 11,500 மெகாவாட் மின்சாரத்தை பெறுகிறது. அது 1 யூனிட் 12 ரூபாய். அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தனியாரிடமிருந்து தமிழக அரசு மின்சாரத்தை பெற்று வருகிறது. தனியாரிடம் மின்சாரம் வாங்குவதன் மூலமாக கமிஷன் பெற்று ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தை இயங்கும்.

திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார்கள் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று ஆனால் தற்போது வரை அது நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் சொன்னார் மின்சார கட்டணம் ஷாக் அடிக்கிறது என்று ஆனால் தற்போது இவர்கள் மின் கட்டணத்தை ஏற்றி வருகிறார்கள். எனவே இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு சொல்வதால் நாங்கள் மின் கட்டணத்தை ஏற்றியுள்ளோம் என தமிழக அரசு சொல்கிறது. மத்திய அரசு சொல்வதை தமிழக முதலமைச்சர் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறாரா?

இதற்கு மட்டும் மத்திய அரசு சொல்வதை நாங்கள் கேட்போம் மற்றதற்கு நாங்கள் கேட்க மாட்டோம் என சொல்கிறாராம் முதலமைச்சர். மக்களுக்கு சுமை கொடுக்கும் இந்த விஷயத்தை தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொள்ளலாமா? தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டி விட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தடுப்பணை கட்ட மறுக்கிறார்கள். தமிழகத்தில் தொடங்கப்பட்ட மின்சார திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள் காரணம் தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றால் கமிஷன் கிடைக்கும்.