மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்து!

இறைபக்தியை வலியுறுத்தும் பக்ரீத்  திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல… இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.

இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பாடமாகும்.

பக்ரீத் சொல்லும் பாடம் தான் உலகின் பகையை ஒழிக்கும் பாடம் ஆகும். அந்த பாடத்தை நாம் அனைவரும் கடைபிடித்தால் உலகிலுள்ள அனைவரும் சகோதரர்களாகி விடுவார்கள். அப்படி ஒரு  அதிசயம் நிகழ வேண்டும் என்பது தான் அமைதியையும், மகிழ்ச்சியையும் வேண்டும் அனைவரின்  விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேற வேண்டும்,  உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்ட அனைத்தும் தழைத்தோங்க வேண்டும் என்று கூறி இஸ்லாமிய சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.