பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் பக்ரித் திருநாள் வாழ்த்து!

இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரித் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும். இக்கடமையின் ஓர் அங்கமாக ஹஜ் மாதம் 10&ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி, அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல பாடங்கள் அடங்கியுள்ளன.

பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் ஆகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

பக்ரித் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது. பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம் என்று இந்த நன்னாளில் உலக மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.