பள்ளிக்கல்வித் துறை சீரழிவிலிருந்து பாடம்கற்க வேண்டும்: கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.

தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையராக பி. பொன்னையா என்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியை தமிழக அரசு நியமித்திருக்கிறது. கல்லூரிக் கல்வி இயக்குனராக உயர்கல்வி குறித்த அனுபவம் பெற்ற மூத்த கல்லூரி முதல்வரை நியமிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், புதிய அரசும் பழைய நடைமுறையையே தொடர்வது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல், கல்வியியல், உடற்கல்வி ஆகிய புலங்கள் சார்ந்த அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகிப்பதற்காக 1967-ஆம் ஆண்டில் தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குனரகம் தொடங்கப்பட்டது. இன்றைய நிலையில், இந்த இயக்ககத்தின் கீழ் 965 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்பட மொத்தம் 1642 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரிக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்ட நாள் முதலாகவே அரசு கல்லூரி முதல்வர்களில் மூத்தவர் ஒருவர் தான் அதன் இயக்குனராக நியமிக்கப்பட்டு வந்தார். அரசு கல்லூரிகளில் விரிவுரையாளர் நிலையில் தொடங்கி முதல்வர் நிலைக்கு உயர்ந்தவர்களுக்கு குறைந்தது 30 ஆண்டுகள் அனுபவம் இருக்கும் என்பதால் அவர்களால் கல்லூரிக் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம்.

ஆனால், 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் நாள் கல்லூரிக் கல்வி இயக்குனராக கார்மேகம் என்ற இ.ஆ.ப அதிகாரி நியமிக்கப்பட்டார். அதற்கு கல்லூரி ஆசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால், சில நிர்வாகக் காரணங்களுக்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்குப் பிறகு பழைய முறையே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் காரணமாகவும், கார்மேகம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக நியமிக்கப் படுவதற்கு முன் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றியவர் என்பதாலும் அப்போது எதிர்ப்புக் குறைந்தது.

எனினும், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குனர் பொறுப்பிலிருந்து கார்மேகம் மாற்றப்பட்டு, இ.சுந்தரவல்லி என்ற இ.ஆ.ப அதிகாரி கல்லூரிக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அதற்கு கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதை அப்போதிருந்த திமுக அரசு பொருட்படுத்தவில்லை. இ.ஆ.ப. அதிகாரிகளுக்கு கல்லூரி நிர்வாகம் குறித்து போதிய புரிதல் இல்லாததாலும், கல்லூரிக் கல்வி ஆணையருக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் இடையே விலக்க முடியாத திரை விழுந்ததாலும் அரசுக் கல்லூரிகளின் நிர்வாகமும், கல்வித்தரமும் சீரழிந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரிக் கல்வி இயக்குனராக அரசு கலைக் கல்லூரி முதல்வர்களின் மூத்தவரையே நியமிக்கும் பழைய நடைமுறையையே மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்காமல் கல்லூரிக் கல்வி ஆணையராக மீண்டும் ஓர் இ.ஆ.ப. அதிகாரியையே அரசு நியமித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தமிழகத்திலுள்ள அரசு கலை – அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவை மேலும் சீரழியவே வழிவகுக்கும்.

கல்லூரிகளை நிர்வகிப்பது என்பது மேலாண்மை சார்ந்த விஷயமோ, வரவு & செலவு கணக்கு சார்ந்ததோ சிக்கலோ அல்ல…. மாறாக, அது முழுக்க முழுக்க கல்வி வளர்ச்சி சார்ந்தது ஆகும். அதை கவனிக்க கல்வியாளர்கள் தான் முடியும். எந்தவொரு துறையாக இருந்தாலும், அதை வழிநடத்திச் செல்ல துறை சார்ந்த அனுபவமும், அறிவும் அவசியம் என்பதால் தான் மிகவும் முக்கியமானத் துறைகளில் இயக்குனர்கள், தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் துறை சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். கொள்கை முடிவுகளை எடுக்கும் செயலாளர்கள் நிலையில் இ.ஆ.ப. அதிகாரிகள் நியமிக்கபட்டாலும், நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளில் துறை சார்ந்தவர்களை நியமிப்பது தான் பல பத்தாண்டுகளாக வழக்கமாக உள்ளது. சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த நடைமுறைகளை மாற்றுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதேபோன்ற நிர்வாகச் சறுக்கல் பள்ளிக்கல்வித் துறையிலும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு நீக்கப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையர் என்ற புதிய பதவி ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குநர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநர் என பல நிலைகளைக் கடந்த ஒருவரை பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கும் முறையை கைவிட்ட திமுக அரசு, பள்ளிக்கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரியை நியமித்தது. இதற்கு அப்போதே பாமக எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்த இரு ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் துறையில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டதால், 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் நாள் பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பும், அதில் இ.ஆ.ப. அதிகாரியை நியமிக்கும் நடைமுறையும் கைவிடப்பட்டு, மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பில் கல்வித்துறையின் மூத்த அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது.

பள்லிக்கல்வித் துறை அனுபவத்திலிருந்து முந்தைய அரசு பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், பள்ளிக்கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டு தோல்வியடைந்த மாதிரியையே கல்லூரிக் கல்வி இயக்ககத்திலும் திமுக அரசு நடைமுறைப்படுத்தியதன் விளைவைத் தான் கல்லூரி கல்வித்துறை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. அரசாவது முந்தைய அரசின் தவறை திருத்தும் என்று எதிர்பார்த்தால், அதுவும் ஏமாற்றமாகவே முடிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் கடந்த இரு ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்து வருவதை தரவுகள் உறுதி செய்கின்றன. தமிழ்நாட்டில் உயர்கல்வியை வளர்க்க வேண்டும் என்றால் பழைய தவறுகள் சரி செய்யப்பட வேண்டும்.

எனவே, பள்ளிக்கல்வித் துறையில் ஐந்தாண்டுகளுக்கு முன் இழைக்கப்பட்ட தவறு எவ்வாறு திருத்தப் பட்டதோ, அதேபோல், இரு ஆண்டுகளுக்கு முன் கல்லூரிக் கல்வித் துறையில் இழைக்கப்பட்ட தவறும் திருத்தப்பட வேண்டும். அதற்காக கல்லூரிக் கல்வி ஆணையராக இ.ஆ.ப. அதிகாரி பொன்னையாவை நியமிக்கும் ஆணையை ரத்து செய்து விட்டு, கல்லூரிக் கல்வி இயக்குனர் பொறுப்பில் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் முதல்வர்களில் அதிக அனுபவம் கொண்ட ஒருவரை நியமிக்க அரசு முன்வர வேண்டும்.