பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்.

தமிழ்நாட்டின் முதுபெரும் பத்திரிகையாளர்களில் ஒருவரும், தினத்தந்தி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான அன்புச் சகோதரர் ஐ. சண்முகநாதன் அவர்கள் வயது முதுமை காரணமாக இன்று சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

சண்முகநாதனை அறியாதவர்கள் கூட அவரது எழுத்துக்களையும், படைப்புகளையும் நன்றாக அறிந்திருப்பர். இவர் தொகுத்தளித்த ‘ ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு’’ என்ற நூல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உலக வரலாறு, வரலாற்றுச் சுவடுகள் உள்ளிட்ட பதிவுகளையும், தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்த கந்தர்வ கானங்கள், இதயதாகம், கண்ணே காஞ்சனா உள்ளிட்ட புதினங்களையும் படைத்தவர் இவர்.

ஐ.சண்முகநாதன் பத்திரிகைக்கு மட்டுமின்றி, பத்திரிகையாளர்களுக்கும் ஆசிரியராக திகழ்ந்தவர். இவரிடம் அனுபவப் பாடம் படித்து உயர்ந்த பத்திரிகையாளர்கள் ஏராளம். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார், சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் அன்பையும், மதிப்பையும் பெற்றிருந்தவர் ஐ.சண்முகநாதன். அவரது மறைவு இதழியல் துறைக்கு பெரும் இழப்பு.

ஐ.சண்முகநாதன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், இதழியல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.