பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் பாட்டாளிகள் நாள் வாழ்த்து!

பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் பாட்டாளிகள் தான். உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. ஆனால், இந்த உண்மைமை உணராமல் தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தமிழக அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 100 மாதங்களுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு கூட வழங்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சுகிறது இந்த அரசு.

பாட்டாளிகளின் உரிமைகளை பறிப்பது ஆக்கப்பூர்வமான செயல் அல்ல. அது அனைத்துத் துறைகளின் வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும். அதை உணர்ந்து பாட்டாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், உழைக்கும் மக்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்க வேண்டும் என்று பாட்டாளிகளின் உரிமை மீட்டெடுக்கப்பட்டதைக் குறிக்கும் இந்நாளில் உறுதியேற்போம்.