இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே,
தமிழ்நாட்டில் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பது சமூகநீதி தான்.
தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி குறித்த எந்த புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை.
சமூகநீதி குறித்த புரிதல் இருந்தால், அதன் முக்கியத்துவம் புரியும்; அதனால் சமூகநீதியை செயல்படுத்த வேண்டும் என்ற அக்கறை தானாக ஏற்பட்டு விடும்.
சமூகநீதி குறித்த புரிதல் இல்லாமல் அக்கறை மட்டும் இருந்தால் கூட பரவாயில்லை. சமூகநீதி குறித்த அக்கறை இருந்தால், அதை செயலாக்குவதற்காக சமூகநீதி குறித்து புரிந்து கொள்ளலாம். ஆனால், இங்கு இரண்டுமே இல்லை என்பது தான் மிகப்பெரிய ஆபத்து ஆகும்.
அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, இரு ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பது.
தமிழ்நாட்டில் எந்தெந்த சமுதாயங்கள் எல்லாம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளனவோ, அந்த சமூகங்களுக்கு எல்லாம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இது தான் சமூகநீதி குறித்த அக்கறை ஆகும்.
ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களைத் திரட்டுவதன் மூலம் இதை சாதிக்க முடியும். இது தான் சமூகநீதி குறித்த புரிதல்.
சமூகநீதி குறித்த அக்கறையும், புரிதலும் கொண்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான்.
தமிழ்நாட்டில் எம்.பி.சி 20% இட ஒதுக்கீடு, வன்னியர் 10.50% இட ஒதுக்கீடு, இஸ்லாமியர் 3.5% இட ஒதுக்கீடு, அருந்ததியர் 3% இட ஒதுக்கீடு ஆகிய நான்கு வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்தது நான் தான்.
தேசிய அளவில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு என இரு வகையான இட ஒதுக்கீடு என மொத்தம் 6 வகையான இட ஒதுக்கீட்டுக்கு காரணமாக இருந்தது நான் தான்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை தழைக்கச் செய்ய வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அரசியலில் வலிமை பெற வேண்டும். அந்த வகையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவளித்து வலிமை சேர்க்க வேண்டியது இளைஞர்களாகிய உங்களின் கடமை; உங்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டியது எங்களின் கடமை.