கவுரவ விரிவுரையாளர்களுக்கு அமைச்சர் உறுதியளித்தபடி செப்டம்பர் மாதத்திலிருந்து ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்க  வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும்  8,741 கவுரவ விரிவுரையாளர்களின் மாத  தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இரு்ந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும்,  நவம்பர் 1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.  கவுரவ விரிவுரையாளர்களின் நீண்ட கால கோரிக்கை  நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும்,  அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி முழுமையாக  நிறைவேற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

 சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ம.க. உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக  உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அதன்பின் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்  ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

அதைச் சுட்டிக்காட்டி கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட நான், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்தவாறு அவர்களின் ஊதியம் ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், கவுரவ விரிவிரையாளர்களுக்கு உறுதியளித்தவாறு ஊதிய உயர்வு வழங்கப்படும்;  செப்டம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால்,  நவம்பர் மாதம் முதல் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சரே வாக்குறுதி அளித்த பிறகும்  அதை நிறைவேற்றாமல் கவுரவ விரிவுரையாளர்களை ஏமாற்றுவது நியாயமல்ல. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதையும் மூன்று மாதங்கள் தாமதமாக வழங்குவது அநீதி.

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தவாறு செப்டம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு  ஊதிய உயர்வு வழங்குவதாக இருந்தால் ரூ.8.74 கோடி மட்டுமே கூடுதலாக செலவாகும். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்  தமிழக அரசுக்கு  இது பெரிய தொகை இல்லை. கவுரவ விரிவிரையாளர்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான  ரூ.5000 ஊதிய உயர்வை  செப்டம்பர் மாதம் முதல் முன் தேதியிட்டு  வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, மே மாதத்தையும் சேர்த்து ஆண்டின் 12 மாதங்களும் ஊதியம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணி ஓய்வின் போது ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கவுரவ விரிவுரையாளர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.