சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டுகளை செய்து வருபவருமான வெற்றி துரைசாமி இமாலய மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அரசியலிலும், அதைக் கடந்தும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் சைதை துரைசாமி. மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தை நடத்தி ஏராளமான இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி உள்ளிட்ட அனைத்திய சேவைப் பணி அதிகாரிகளையும், மாநில முதல் தொகுதி அதிகாரிகளையும் உருவாக்கி வருபவர் சைதை துரைசாமி. இவை தவிர திருமணம் உள்ளிட்ட எராளமான சமூகப் பணிகளையும் செய்து வருபவர் அவர். சைதை துரைசாமியின் அனைத்து தொண்டுகளுக்கும் துணை நின்று உதவியவர் வெற்றி துரைசாமி.
திரைத்துறையில் கால் பதித்து மக்கள் நலன் சார்ந்த திரைப்படங்களை இயக்கத் தொடங்கிய வெற்றி துரைசாமி, தமது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தலங்களை பார்க்கச் சென்ற போது தான் அவரது மகிழுந்து விபத்தில் சிக்கி சட்லெஜ் நதியில் கவிழ்ந்தது. கடந்த 4-ஆம் தேதி இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வெளியான நாளில் இருந்து வெற்றி உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நினைத்து வந்தேன். ஆனால், எனது எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதுடன், அவர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி எனது இதயத்தை நிலைகுலையச் செய்து விட்டது. சைதை துரைசாமிக்கு ஏற்பட்ட இழப்புக்கு எப்படி ஆறுதல் கூறுவது? என்றே எனக்குத் தெரியவில்லை.
வெற்றி துரைசாமியை இழந்து வாடும் அவரது தந்தை சைதை துரைசாமி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.