இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே,
நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் உலகில் மிகவும் அறியப்படாத நாடுகளில் ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால், இப்போது உலகில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக ஐந்தாவது பொருளாதார வல்லரசாக இந்தியா திகழ்கிறது. இந்தச் சாதனையை சாத்தியமாக்கியவர்கள் நீங்களே. அதனால் தான் உங்களை மக்கள்தொகையின் லாபப்பங்கு என்று பெருமையுடன் அழைக்கிறோம்.
இளைஞர் சக்தி என்பது எல்லையில்லாத வலிமை கொண்டது. அது கிட்டத்தட்ட அலாவுதீனின் அற்புத விளக்கைத் தேய்த்தால் வெளிவரும் பூதத்திற்கு இணையான வலிமை ஆகும். அலாவுதீன் அற்புத விளக்கு பூதத்தைப் போலவே இளைஞர்களாகிய உங்களுக்கு எவ்வளவு பணிகளைக் கொடுத்தாலும் அதை செய்து முடிக்கும் வல்லமை உண்டு. அதேநேரத்தில் இளைஞர் சக்தி முழுமையாக பயன்படுத்தப் படவில்லை என்றால் அது தவறான திசையில் பயணித்து விடும் வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இளைஞர் சக்தி சரியாக பயன்படுத்தப்படவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இளைஞர் சக்தி சரியாக வழிநடத்தப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை என்ற அதிருப்திக் குரல்கள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த அதிருப்தி போக்கப்பட வேண்டும்.
– மருத்துவர் அய்யா அவர்கள்