பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்.
இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களே,
தமிழ்நாட்டையே நேற்று உலுக்கிய ஒரு செய்தி தலைநகர் தில்லியில் போதைப் பொருட்களை மிகப்பெரிய அளவில் கடத்தி வந்த கும்பல் பிடிபட்டிருக்கிறது என்பதும், அந்த கும்பலின் தலைவராக கருதப்படும் ஜாபர் சாதிக் தமிழ்நாட்டின் தொழிலதிபராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்பட்டவர் என்பதும் தான்.
தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் மது மட்டும் தான் இளைஞர்களை சீரழிக்கும் சக்தியாக இருந்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் போதைப் பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மூலை, முடுக்குகளிலும் கஞ்சா போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் திளைப்பது சாதாரணமாகிவிட்டது.
உலகில் உள்ள அனைத்து வகையான போதைப் பொருட்களும் புழங்கும் மையமாக தமிழ்நாடு மாறியிருப்பது பெருமைப்படுவதற்கான விஷயமல்ல. இப்போது அந்த நிலையைக் கடந்து தமிழ்நாட்டிலிருந்து போதைப் பொருட்கள் உலகின் பல நாடுகளுக்கு கடத்தப்படுவது தமிழ்நாட்டிற்கு பெரும் அவலம் ஆகும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்து வருவது குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி தான். அதற்கான பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து மது, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களையும் அகற்றும் வலிமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் தான் உண்டு. அதை இளைஞர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பை பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கும் கடமை இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு. மக்களவைத் தேர்தலில் நீங்கள் காட்டும் ஆர்வமும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு அளிக்கும் ஆதரவும் தான் நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றுவதை உறுதி செய்யும். தமிழ்நாட்டில் போதையை ஒழிக்க உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு வரும் மக்களவைத் தேர்தல்… நீங்கள் எங்களுக்கு அளிக்கும் வாய்ப்பு, மக்களவைத் தேர்தலில் வாக்களித்து எங்களுக்குத் தேடித் தரும் வெற்றி!