ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில், 170 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டி எடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த செய்தியை அறிந்த, ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமைத்தாயகம் அமைப்பினர், வெட்டப்பட்ட மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தினை நடத்தினர்.
போராட்டத்தினை அடுத்து அங்கு வந்த அதிகாரிகளிடம் வெட்டப்பட்ட மரத்தினை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் மரத்தினை வேறு இடத்தில் நட்டு பராமரிக்கப்படும் என உறுதி அளித்தனர்.
முன்னதாக கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு பகுதியிலும், திருப்போரூர் அடுத்த வெண்பேடு பகுதியிலும் இதுபோல சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட ஆலமரத்தினை, வேறு இடத்தில் நடக்கோரி பசுமை தாயகம் அமைப்பினர், இதே போன்று நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டதையடுத்து, வேறு இடத்தில் நடப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
கடந்த மாதம் இதனைச் சுட்டிக்காட்டி பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதத்துடன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரத்திலும் வெட்டப்பட்ட மரத்தினை, வேறு இடத்தில் நட்டு புத்துயிர் அளித்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாமக மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பினர் களத்தில் இறங்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதுடன், இதுபோன்ற சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்படும் மரங்களை வேறு இடத்தில் பராமரிப்பது, முறைகேடாக மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து நிறுத்துவது என பல்வேறு பணிகளை பசுமைத் தாயகம் அமைப்பினர் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.